மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்தியா – எகிப்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கில் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார்.
இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், தொழில்துறை ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சருடன் 130-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இந்தியக் குழுவும் சென்றுள்ளது.
பயணத்தின் தொடக்கமாக, கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் போர் நினைவிடத்தில் இந்திய வீரர்களுக்கு பியூஷ் கோயல் மரியாதை செலுத்தினார். அங்கு நினைவுகூரப்பட்டுள்ள 4,000 வீரர்களில் 3,727 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, எகிப்தில் வாழும் இந்தியச் சமூகத்தினரைச் சந்தித்துப் பேசிய அவர், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், எகிப்தில் செயல்பட்டு வரும் சுமார் 70 இந்திய நிறுவனங்கள் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தின்போது இந்தியா – எகிப்து கூட்டு வர்த்தகக் குழுவின் 7-வது கூட்டம், கூட்டு வர்த்தக கவுன்சில் கூட்டம் மற்றும் வர்த்தக மன்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
மேலும், எகிப்தின் வர்த்தக அமைச்சர் முகமது ஃபரீத் சலே உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்
