மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசின் செயல்பாடு ஏற்புடையதல்ல!– ஜி.கே.வாசன் கண்டனம்!

ஜி.கே.வாசன்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவது தமிழகத்தின் உரிமைகளை மீறும் செயலாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டப்படும் என்றும், அதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துக் கூறுவதும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தமிழக விவசாயிகளுக்கு வெறும் பயிர் பிரச்சினை மட்டுமல்ல; அது அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு மாதந்தோறும் உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடாமல் கர்நாடக அரசு நியாயமான முறையில் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதியாக, தமிழக விவசாயிகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply