இந்திய கடற்படை கப்பல் பெட்வாவை சீரமைக்கவும், அதன் இயக்க அமைப்பை மாற்றியமைப்பதற்கும், கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.498.58 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் 2026 நவம்பர் 11 அன்று பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படையில் பிரம்மபுத்திரா வகை போர்க்கப்பலான ஐஎன்எஸ் பெட்வாவை இயக்குவதற்கான அமைப்பில் பெரும் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி தற்போதைய நீராவி அடிப்படையிலான இயக்க அமைப்பு நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக டீசல் அடிப்படையிலான இயக்க அமைப்பு பொருத்தப்படவுள்ளது. அத்துடன், நவீன ஆயுத தொகுப்புகளை அமைப்பதன் மூலம் கப்பலின் போர்த்திறன்கள் மேம்படுத்தப்பட்டு அதனுடைய செயல்பாட்டுதிறன் அதிகரிக்கப்படும்.
இத்திட்டம், கப்பல் பழுதுபார்ப்பு, பராமரிப்பு முறையில் குறிப்பாக இயக்க அமைப்புகளை மாற்றுதல், கடற்படையின் கப்பல்களை நவீனப்படுத்துதல் ஆகிய பணிகளில் உள்நாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தும். இத்திட்டதில் 50-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் இந்திய கப்பல் கட்டுமானம், அது சார்ந்த தொழில்துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம், தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற அரசின் தொலைநோக்கு பார்வைக்கு பெறும் ஊக்கமளிப்பதோடு நாட்டின் உள்நாட்டு கடற்படை கப்பல் பழுதுபார்த்தல், பராமரிப்பு திறன்களை வலுப்படுத்தும்
திவாஹர்
