மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு மத்திய அரசும், சுற்றுச்சூழல் நிர்வாகமும் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும், கர்நாடகாவின் சொந்த நிலத்தில் அணை கட்டிக்கொள்ள உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தனது கௌரவப் பிரச்சினையாகக் கருதுகிறது. ஆனால், தமிழக டெல்டா விவசாயிகளுக்கு இது வாழ்வாதாரப் பிரச்சினையாகும். இப்பிரச்சினை வெறும் உணர்வோடு கலந்ததல்ல; விவசாயிகளின் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் கலந்ததாகும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்குக்கூட கட்டுப்படாமல் செயல்படும் கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மதிக்காத வகையில் அலட்சியமாகப் பேசி வருவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.
கர்நாடகாவில் வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக அங்குள்ள அரசியல் கட்சிகள் மாறி மாறி வாக்குறுதிகளை அளித்து மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளின் நிலை குறித்து அவை கவலைப்படுவதில்லை.
எனவே, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசும், சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புகளும் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு உரிய நீதியை வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
