மாசு இல்லாத பசுமை தீபாவளியைக் கொண்டாடுங்கள்! – டெல்லி மக்களுக்கு இஐஏசிபி வேண்டுகோள்.

தில்லி தேசிய தலைநகரப் பகுதி மக்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாசில்லா பசுமை தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்திய உலக இயற்கை நிதியத்தின் (WWF) சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டப் பிரிவான இஐஏசிபி (EIACP) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசின் மிஷன் லைஃப் (Mission LiFE) எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 130 நகரங்களில், 2026 அக்டோபர் 20 முதல் நவம்பர் 8 வரை நாடு தழுவிய பசுமைத் தீபாவளி விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, டெல்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் உள்ளது. மேலும், காற்றின் தரத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் கணிப்பின்படி, தீபாவளி பண்டிகைக் காலத்தில் காற்றின் தரம் ‘கடுமையான’ நிலையை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய தலைநகரப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிலையான செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இஐஏசிபி கேட்டுக்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன், மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளியைக் கொண்டாடுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply