சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர மக்களுக்குச் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதுடன், பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான பணிமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும்.
தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தச் செலவு ஒப்பந்த (Gross Cost Contract) முறையின் கீழ், புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதுடன், அவற்றை இயக்குவதற்குத் தேவையான மின்சார மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்க வழிவகை ஏற்படும்.
கே.பி.சுகுமார்
