“புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருதைப் பெற்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் பெயரில் கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள இமாலய ஊழல் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர் பெயரால் அமைந்துள்ள நூலகத்தில் குப்பையில் வீசி எறியப்பட வேண்டிய நூல்களை கொள்முதல் செய்து பகல் கொள்ளை அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
இது போன்ற வெட்க கேடான நிகழ்வு உலக வரலாற்றில் இது வரை நடைபெற்றது இல்லை.
அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியிட்ட 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை ரூ. 1,445. அந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும் பலமடங்கு அதிக விலையில்தான் இருக்கின்றன. பிற பதிப்பகங்கள் இதே பக்கங்களை கொண்ட நூல்களை ரூ. 350-க்குதான் விற்கிறார்கள்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில், தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படிதான் இருக்கின்றன.
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் தவறான தகவல்களுடன் நூற்றுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய பரிந்துரை குழு அமைத்து கடந்த நவ. 5, 2025 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இணையவழியில் கூட்டத்தில் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற 112 உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்களை பரிந்துரை செய்யதுள்ளனர்.
இதன் பின்னர், ஜன. 9, 2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை ஆய்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான இறுதிப் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை, விலை நிர்ணயம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 2, 2026 அன்று நூல்களுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்ன? அதிலிருந்து அரசு இறுதி செய்த புத்தகங்கள் என்னென்ன?
எத்தனை கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? ஒவ்வொரு கொள்முதல் ஆணையிலும் எந்தெந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன?
தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புத்தகங்கள் எவை? அவை என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் எந்தக் கொள்முதல் ஆணையில் இடம் பெற்றன? எந்த தேதியில் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டது?
சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான தொகை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது?
இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்கள் யார், யார்? எந்த முகவரியிலிருந்து இயங்குகின்றன?
இவை ஒவ்வொன்றும் எந்தெந்தத் தேதிகளில் நடைபெற்றது?
விஸ்வரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு கடந்த கால திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்து இயக்கிய
யோக்கிய சிகாமணிகள் பதில் அளிக்க வேண்டும்.
அறிவுசார் சமூகத்தை உருவாக்க அச்சாணியாக விளங்கும் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் கொள்ளையடித்தக் கும்பலை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும்.
பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள குப்பை நூல்களை துடைத்து எறிந்து , பகுத்தறிவு பகலவன் பெரியார் பெயரை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
