அலங்கார மீன்வள மேம்பாட்டிற்கான செயல் திட்டம் – குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (31.08.2026) லட்சத்தீவின் அகத்தியில் நடைபெற்ற மீன்வள மேம்பாடு தொடர்பான மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அலங்கார மீன்வள மேம்பாட்டிற்கான செயல் திட்டமான “மிஷன் ரங்கீன் மச்லி 2031” என்பதை வெளியிட்டார். மேலும், அவர் மீன்வளத் துறையைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த நிகழ்வு லட்சத்தீவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும், இது இந்தியாவின் நீலப் புரட்சியில் ஒரு புதிய மைல்கல் என்றும் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் மீன்வளத் துறை, பொருளாதாரத்தின் ஒரு முக்கிய துறையாக உருவெடுத்துள்ளது என்றும் இது நீலப் புரட்சியை வலுப்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் அரசை அணுகுவதற்காகக் காத்திருக்காமல், ஆதரவையும் திட்டங்களையும் நேரடியாக மீனவ சமூகங்களுக்கே கொண்டு செல்வதன் மூலம் அரசு, ஆளுகை நடைமுறையை மாற்றியமைத்து வருகிறது என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

கடந்த நிதியாண்டில் ரூ.73,000 கோடிக்கும் அதிகமான மீன்கள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் எடுத்துரைத்தார். மீன்வளத்தை ஒரு பரம்பரைத் தொழிலாக மட்டும் பார்க்காமல், அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, உலகளாவிய வாய்ப்புகள் ஆகியவை நிறைந்த நவீன தொழிலாகப் பார்க்குமாறு அவர் இளைஞர்களை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்; லட்சத்தீவின் நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல், மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் டாக்டர் அபிலாக்ஷ் லிகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply