மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், கர்நாடக மாநிலம் மைசூருவில் நாளை (2026 ஆகஸ்ட் 24) முதல் வரும் 26-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ‘பழங்குடியினர் மொழிகள் மற்றும் அருங்காட்சியகங்கள்’ குறித்த தேசிய மாநாட்டை நடத்துகிறது.
இம்மாநாடு பழங்குடியினர் மொழிகளை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் புத்துயிரூட்டுதல் குறித்த தேசிய உரையாடலுக்கு வழிவகுக்கும். அத்துடன் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் மற்றும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்களை வலுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும். இந்தியாவின் பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிப்பதும், எந்தவொரு சமூகமும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதும் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியின் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன.
இந்தியாவின் பழங்குடிச் சமூகத்தினர் பல நூறு மொழிகள் மற்றும் வட்டார வழக்குகளின் பாதுகாவலர்களாக உள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை எழுத்து வடிவம் இன்றியும், வகுப்பறைகளில் கற்பிக்கப்படாமலும், அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமலும் அருகி வருகின்றன. ஒரு பழங்குடி மொழியின் இழப்பு என்பது சூழலியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் பண்பாட்டு அறிவு ஆகியவற்றின் ஒரு முழுத் தொகுப்பையுமே இழப்பதற்குச் சமம் என்பதை உணர்ந்து, ஒரு ஒருங்கிணைந்த தேசியச் செயல்திட்டத்தை வகுப்பதற்காக இந்தத் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடிச் சமூகங்களின் பங்களிப்பை அங்கீகரித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்த தொலைநோக்குப் பார்வையையும் இம்மாநாடு முன்னெடுத்துச் செல்லும். பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் 10 மாநிலங்களில் 11 பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 4 அருங்காட்சியகங்கள் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த அருங்காட்சியகங்களை மேலும் மேம்படுத்துவதற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையும் இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
எம்.பிரபாகரன்
