பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஆகஸ்ட் 14, 2026 அன்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 16 பதக்கங்களை வென்ற இந்திய ராணுவக் குழுவினருடன் கலந்துரையாடினார். இப்போட்டிகளின் போது இந்தியா வென்ற மொத்த 39 பதக்கங்களில் (13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம்), இந்திய பாதுகாப்புப் படையினர் 18 பதக்கங்களை வென்றனர் (16 பதக்கங்கள் இந்திய ராணுவத்தாலும், 2 பதக்கங்கள் இந்திய கடற்படையாலும்).
தனது உரையில் பாதுகாப்பு அமைச்சர், உடல் மற்றும் மன அழுத்தங்களைக் கடந்து, ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தேசத்திற்குப் பெருமை சேர்த்த இந்தியப் பாதுகாப்புப் படையினரின் வலுவான மன உறுதியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பாராட்டினார். இந்தச் சாதனையை “அசாதாரணமானது” என்று வர்ணித்த அவர், இந்த விளையாட்டு வீரர்கள் “ஒரு சிப்பாய் மற்றும் ஒரு வெற்றியாளரின் சரியான கலவையாக” இருப்பதால், அவர்கள் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கிறார்கள் என்று வலியுறுத்தினார்.
குத்துச்சண்டையில் வழங்கப்பட்ட 6 தங்கப் பதக்கங்களில் 4-ஐ பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் வென்றது குறித்துப் பேசிய திரு ராஜ்நாத் சிங், இந்தச் சாதனை இந்தியாவின் வளர்ந்து வரும் பெண் சக்திக்கு ஓர் சான்றாகும் என்று கூறினார். மேலும், இந்தச் சாதனை, அதிகமான பெண்களை இந்த விளையாட்டைத் தொடரவும் பாதுகாப்புப் படைகளில் சேரவும் ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்திய சாம்பியன்கள் உருவாகி வருவதை ஒப்புக்கொண்ட பாதுகாப்பு அமைச்சர், இன்று விளையாட்டுத் துறை ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அது இனி ஒரு சிலருக்கே உரிய தனிச்சிறப்புரிமையாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போன்ற வரவிருக்கும் நிகழ்வுகளுக்காக அவர் விளையாட்டு வீரர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
புது தில்லியில் உள்ள கர்த்தவ்ய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் மற்றும் பிற மூத்த இந்திய ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ராணுவப் படையணியின் செயல்பாடு பல முதல் நிகழ்வுகளையும் சாதனைகளையும் கண்டது. அவற்றுள் சில:
நாயப் சுபேதார் சர்வேஷ் குஷாரே உயரம் தாண்டுதலில் இந்தியாவின் முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்திய தடகள வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.
நாயப் சுபேதார் குல்வீர் சிங், ஒரே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 5,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்று, இரண்டு தடகளப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
60 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஹவில்தார் ஹர்ஷ், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் ஜூடோ தங்கப் பதக்கத்தை வென்று, நாட்டில் இந்த விளையாட்டுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தந்து சுபேதார் சோமன் ராணா மற்றும் லான்ஸ் நாயக் ஷுபம் ஜுயல் ஆகியோர் வரலாறு படைத்தனர்.
பளுதூக்குதலில், ஹவில்தார் அஜய் பாபு 79 கிலோ எடைப் பிரிவில், ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ தூக்கி விளையாட்டு சாதனை படைத்தும், மொத்தமாக 330 கிலோ தூக்கி அசத்தியும் சாதனை படைத்தார்.
குத்துச்சண்டையில், 100 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்து சாதனையை முறியடித்து, இந்திய ராணுவம் முன்னெப்போதும் இல்லாத ஒரு தேசிய சாதனைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கியது. இந்தியா மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றது; இது, ஒரே விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் எந்தவொரு நாடும் வென்ற அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த 7 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களில், இந்திய ராணுவ வீரர்கள் 6 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இந்தச் சாதனைகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் மிஷன் ஒலிம்பிக் பிரிவு மற்றும் அதன் உயர் செயல்திறன் மையங்களின் பல ஆண்டுகால ஒழுக்கமான பயிற்சி, தியாகம், தொழில்முறைப் பயிற்சி, விளையாட்டு அறிவியல் ஆதரவு மற்றும் மேன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
திவாஹர்
