இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், 2026 ஆகஸ்ட் 10 முதல் 13 வரை மொரிஷியஸ் நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிக முக்கியமான நட்பு நாடான மொரிஷியஸுடன் இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
தனது பயணத்தின் போது, மொரிஷியஸ் அரசின் மூத்த தலைவர்களைக் கடற்படைத் தலைமைத் தளபதி சந்தித்துப் பேசவுள்ளார். கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, ராணுவக் கூட்டாண்மை உள்ளிட்ட இருநாடுகளின் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து அவர் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார். இத்தகைய உயர்நிலைச் சந்திப்புகள் கடல்சார் துறையில் இருநாடுகளிடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்தவும், செயல்பாட்டு அளவிலான தொடர்புகளை மேம்படுத்தவும், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்தவும் பெரிதும் உதவும்.
இந்தியாவும் மொரிஷியஸும் நீண்டகாலமாக நெருக்கமான கடல்சார் உறவைக் கொண்டுள்ளன. இந்திய கடற்படை, மொரிஷியஸின் தேசிய கடலோரக் காவல்படையுடன் இணைந்து பயிற்சிப் பரிமாற்றங்கள், பிரத்யேக பொருளாதார மண்டலங்களின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு செயல்பாடுகளில் வழக்கமாக ஈடுபட்டு வருகிறது. மிலன், கோவா கடல்சார் மாநாடு போன்ற இந்தியக் கடற்படையின் முக்கியப் முயற்சிகளில் மொரிஷியஸ் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கடற்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு மொரிஷியஸுக்கு மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், பிராந்தியப் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
