நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நமது பெண்கள் அணியும் குங்குமத்தையும் பாதுகாக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்ற உலகளாவிய செய்தியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா கூறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நமது பாதுகாப்புப் படைகளின் இணையற்ற வீரத்தை ‘ ஆபரேஷன் சிந்தூர்’ நிரூபித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 09, 2026) தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற ‘சிந்தூர் மகாரக்ததான் யாத்ரா’ என்ற ரத்த தான முகாமில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளையும் அவர்களின் வழிகாட்டிகளையும் ஒழித்ததற்காகவும், இந்தியா மீது தீய எண்ணம் கொண்டவர்கள், கடுமையான விளைவுகளைச் சந்திப்பதை உறுதி செய்ததற்காகவும் இந்தியப் பாதுகாப்புப் படைகளை அமைச்சர் பாராட்டினார்.
இந்த மாபெரும் ரத்த தான முகாம் கருணையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த முகாமில் பங்கேற்ற ரத்தக் கொடையாளர்களில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 1,000 மல்யுத்த வீரர்களும் தடகள வீரர்களும் அடங்குவர். இது தன்னலமற்ற சேவையின் உணர்வையும் பாதுகாப்புப் படைகள் மீதான அவர்களது மதிப்பையும் வெளிப்படுத்தியது.
நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர், இன்று தானமாக வழங்கப்பட்ட ரத்தம், எதிர்காலத்தில் தேவைப்படும் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் அமையும் அமையும் என்று தெரிவித்தார். ரத்தத்தை மனித உடலால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும் அதை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தானமாக வழங்க முடியும் என்பதாலும், ரத்த தானம் என்பது தர்மத்தின் உன்னதமான வடிவங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
ரத்த தானத்தை ஒரு கலாச்சாரமாக மாற்றுமாறு மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். “2047-ல் நமது சுதந்திரத்தின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, நமது நோக்கம் ஒரு வளர்ந்த பொருளாதாரம் என்பதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது எனவும் மக்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்குமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர், ஆரோக்கியமாகவும் உடற்தகுதியுடனும் இருக்கும் ஒரு தனிநபர், சமூகத்திற்கு ஒரு பெரும் சொத்தாகத் திகழ்வதோடு, ரத்த தானம் போன்ற உன்னதமான பணிகளை மேற்கொள்வதற்கும் சிறந்த தகுதி பெற்றவராக இருப்பார் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே; ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், மகாராஷ்டிர அரசின் தொழில்துறை அமைச்சர் திரு உதய் ரவீந்திர சமந்த், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் பிற மூத்த ராணுவ, சிவில் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா
