மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்துகிறது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.

மாலுமிகளின் நலன், பாதுகாப்பு, சேவை வழங்கல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான தொடர் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார். மாலுமிகள், கப்பல் நிறுவனங்கள், துறைமுகங்கள், பிற கடல்சார் தரப்பினருக்கான சேவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமான ‘இ-சமுத்ரா’வை இன்று அவர் தொடங்கி வைத்தார்.

இ-சமுத்ராவுடன் இணைந்து, கடல்சார் நிர்வாகத்தை நவீனமயமாக்குவதையும் மாலுமிகளின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொடர் முன்முயற்சிகளை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் காட்சிப்படுத்தியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ‘கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் 2030’, ‘கடல்சார் அம்ரித் கால் தொலைநோக்குத் திட்டம் 2047’ ஆகியவற்றின் மூலம் கடல்சார் துறையில் ஒரு லட்சியமிக்க மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது என்று அவர் கூறினார். இந்தப் பயணத்தின் மையமாக மாலுமிகள் திகழ்கின்றனர் எனவும், ஒவ்வொரு இந்திய மாலுமியும் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும், கண்ணியத்துடனும் பணியாற்றுவதை உறுதி செய்ய அரசு முயற்சி மேற்கொள்கிறது என்றும் திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.

இ-சமுத்ராவின் தொடக்கமானது, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட கடல்சார் நிர்வாகத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. பல சேவைகளை ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், சேவை வழங்கலை மேம்படுத்தவும், இணக்கச் சுமைகளைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், மேலும் உலகின் முன்னணி கடல்சார் நாடாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Leave a Reply