அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை வாழ்வாதாரம், சமூகம் சார்ந்த தேவைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

லக்னோவின் பந்த்ராவில் உள்ள மகரிஷி பராஷர் உயிரியல் வள மையத்தில், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில்-தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாவது சுற்றுச்சூழல்-கல்வி மையமான பிரகிருதி கியான் தாம்-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, அறிவியல் நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள், வெற்றிக் கதைகள், சமூகப் பயன்பாடுகளை முறையாக வெளிப்படுத்துவதன் மூலம் அவற்றின் பணிகளைச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சரும், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சிலின் துணைத் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

அறிவியல் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆய்வகங்கள், வர்த்தக ரீதியிலான செயல்பாடுகளுடன் இருந்து விடாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் விரிவடைய வேண்டும் என்றும், நவீன தொழில்நுட்பங்கள், முன் முயற்சிகளை வெளிப்படுத்த டிஜிட்டல், சமூக ஊடகத் தளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இதன் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், தொழில்துறையினர் போன்ற பல்வேறு தரப்பினருக்கு அறிவியல் ரீதியிலான தீர்வுகள், வாழ்வாதாரத்தை உருவாக்கும் வாய்ப்புகளைப் பெற முடியும். மேலும், பல்வேறு துறைகள், அமைச்சகங்களுக்கு இடையே, ஒருமித்த, ஒன்றையொன்று சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவதன் மூலம், அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளின் சமூகத் தாக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply