ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் உஜ் பன்னோக்கு திட்டத்தின் தற்போதைய நிலை, அத்திட்டத்தை கட்டம் கட்டமாகச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஆகியவை குறித்து, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள, ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான வாப்கோஸ் லிமிடெட் அதிகாரிகளுடன் அமைச்சர் ஒரு விரிவான கூட்டத்தை நடத்தினார்.
உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின் பலன்கள் மக்களை விரைவில் சென்றடையும் வகையில், அதனை விரைவாகச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணிக்காத்து, புதுமையான தீர்வுகளை ஆராயுமாறு அவர் வாப்கோஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேசிய திட்டங்கள் புது உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உஜ் பல்நோக்குத் திட்டம் குறித்த சிந்தனை தொடங்கியதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக இது செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக, ராவி நதி, அதன் துணை நதிகளின் நீர் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் பாய்ந்து வருவதாக அவர் கூறினார். இத்திட்டம் விவசாய உற்பத்தித்திறனை வலுப்படுத்தி, நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
