தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவலுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது!- மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (01.08.2026) மகாராஷ்டிராவின் புனேவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவலுக்கு 2026-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் தேசிய விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி சுனேத்ரா பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மொகல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், இன்று (ஆகஸ்ட் 01) லோகமான்ய பாலகங்காதர திலகரின் 106- வது நினைவு தினம் என்று கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு புதிய திசையையும் அர்த்தத்தையும் வழங்குவதற்காக, திலகர் “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்” என்ற மந்திரத்தை வழங்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். நமது ஆட்சி முறை, மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவை உறுதியாக நிலைநாட்டப்படும்போது மட்டுமே முழுமையான சுயராஜ்யத்தை அடைய முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். திலகர், சுயராஜ்யம், சுதந்திரத்திற்கான இயக்கங்களுடன் மக்களை இணைத்தார் என்று திரு அமித் ஷா கூறினார். இப்போது, நாடு திலகர் காட்டிய கலாச்சார தேசியவாதப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

லோகமான்ய திலகர் ஒரு ஆசிரியராகவும், தலைசிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார் என்று திரு அமித் ஷா கூறினார். ஒரு மாபெரும் சிந்தனையாளராக, அவர் இந்தியாவின் ஆன்மாவை உலகிற்கு வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் சுயராஜ்ய உணர்வைத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.

பகவத் கீதையின் நடைமுறைச் சாரத்தை திலகர் நாட்டுக்கு எடுத்துரைத்தார் என்று உள்துறை அமைச்சர் கூறினார். சுயசார்பு, ஒழுக்கம், தேசம், அரசியலமைப்பு மீதான கடமை உணர்வு ஆகியவையும் சுயராஜ்யத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று திரு அமித் ஷா மேலும் கூறினார் . இளைஞர்கள் திலகரின் வாழ்க்கை, உரைகள், எழுத்துக்களைப் படித்து, அவற்றிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று திரு அமித் ஷா அறிவுறுத்தினார்.

திரு அஜித் தோவலுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது, தேச சேவைக்காக உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக அமையும் என்று திரு அமித் ஷா கூறினார்.

Leave a Reply