காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரவஞ்சனைச் செய்கிறது! -டாக்டர் துரை பெஞ்சமின்.

தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் மேகதாதுவில் அணைக் கட்டக்கூடாது என்கிறார்கள்! ஆனால், கர்நாடக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்கள் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்கிறார்கள்! இதை திருமதி.சோனியா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியும், திருமதி.பிரியங்கா காந்தியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் மேகதாதுவில் அணைக் கட்டக்கூடாது என்கிறார்கள்! ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்கிறார்கள்! இதை இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோதியும், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷாவும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவர் திரு. நிதின் நபினும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

இதற்குப் பெயர்தான் தேசியமா? இதற்குப் பெயர்தான் இறையாண்மையா? இதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சியா?

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ல் இந்தியா-பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) கையெழுத்தானது. இதன் கீழ் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் கார்கிலில் கடும் யுத்தம் நடந்தபோது கூட, சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா பாகிஸ்தானுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.
சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தை மதித்து இந்தியா நடந்து கொண்டது.

எதிரி நாட்டு மக்களிடம் கூட, சர்வதேச சட்டப்படி நேர்மையாக நடந்து கொண்ட அப்போதைய நமது இந்திய அரசு, மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக நடந்து கொள்வது ஏன்?

காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWMA), காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் (CWRC) உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2018-ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டவை. இவை கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீரைப் பகிர்வதைக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செயல்படும் அமைப்புகள் ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

தர்மத்தின் பக்கம் நின்று நீதிப் பரிபாலனம் வழங்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக செயல்படுவது எந்த வகையில் நியாயம்?

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், விரோதமாகவும் “பெரிய அண்ணன்” தோரணையில் தொடர்ந்துச் செயல்படும் கர்நாடக மாநில அரசைக் கண்டிப்பதற்கு கூட மத்திய ஆட்சியாளர்கள் தயங்குவது ஏன்?

கர்நாடக மாநில மக்களின் ஓட்டு அரசியலுக்காக, காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரவஞ்சனை செய்வது எந்த வகையில் நியாயம்?

உலகத்தில் நடுநிலைமை என்று ஒன்று கிடையாது. ஒன்று நீதியின் பக்கம் துணிந்து நிற்க வேண்டும்! இல்லையென்றால், அநீதிக்கு துணைப் போக வேண்டும்! அப்படி இல்லாமல், பாம்புக்கு தலையையும்; மீனுக்கு வாலையும் ஆட்டுவதைப் போல” நாடகமாடுவது; ஒரு நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகல்ல!

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் பக்கம் தான் நீதி இருக்கிறது!அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக தான் மத்திய அரசு களமிறங்க வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கும், இரு மாநில மக்களின் ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுகளைக் கடுகளவும் மதிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காகக் கெட்ட நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு மீதும், ஆட்சியாளர்கள் மீதும், மத்திய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் கர்நாடகா அரசு அடங்கவில்லை என்றால், அவசியம் ஏற்பட்டால் கர்நாடக மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உச்சநீதிமன்ற அளித்துள்ள தீர்ப்புப்படி காவிரி நதிநீர் பங்கீட்டை செயல்படுத்த வேண்டும். அதற்கு பெயர் தான் ஆளுமை; அதுதான் அரசியல் அறம்.

Leave a Reply