திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சஞ்சீவி நகர் கொண்டையம்பேட்டை இதற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பழைய காவிரி பாலம் மராமத்து மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தை சீர் செய்வதற்காக திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் இரவு பகல் எந்நேரமும் போலீசார் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 18, 2026, சனிக்கிழமை) காலை சுமார் 7:00 மணி அளவில் காவிரியின் இடது கரையில் கல்லணை சாலை திருப்பத்தில் உயர் கனரக வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் சக்கரம் சிக்கிக்கொண்டதால் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கே நின்று விட்டது. அந்த உயர் கனரக வாகனத்தின் ஓட்டுனர் பலமுறை முயற்சித்தும் வாகனத்தை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. இதனால் கல்லணை, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்ச்சோலை, பொண்ணு ரங்கபுரம், தங்கையன் கோவில் மார்க்கமாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடையும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அங்கு பணியில் இருந்த காவலர்கள் அந்த உயர் கனரக வாகனத்தை அங்கிருந்து நகர்த்துவதற்கான வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிரேன் உதவியுடன் மீட்புப் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
