தமிழக அரசு – விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் செயல்பட வேண்டும்!-‌ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு – மின் இணைப்புக்கு தட்கல் முறையில் பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் 50,000 விவசாயிகளிடமிருந்து தட்கல் மின் இணைப்புக்கு ரூ. 1,250 கோடி வசூலித்துவிட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் மின் இணைப்பு தரவில்லை என விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

விவசாயத் தொழிலில் கடுமையாக ஈடுபட்டு, விளைவித்து, விளைச்சல் பாதிக்கப்பட்டு, உரிய விலை கிடைக்காமல், கடன் கட்டமுடியாமல், பாதிக்கப்பட்டுள்ளனர் விவசாயிகள்.

அப்படி இருக்கும்போது விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்.

அதாவது தட்கல் (Tatkal) முறையில் மின் இணைப்புக்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியும், பல மாதங்களாக மின் இணைப்பு கிடைக்காமல் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் காத்திருக்கின்றனர்.

ஆற்றில் நீர் வரத்தில் அவ்வப்போது தடை ஏற்படுவதால் பம்புசெட் மூலம் பாசனம் மேற்கொள்ள திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் செலவில் விவசாயிகள் போர்வெல் அமைத்துள்ளனர்.

தட்கல் திட்டத்தில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்தவுடன், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தியுள்ளனர்.

ஆனால், பணம் செலுத்தி மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்

5 ஹெச்பி முதல் 15 ஹெச்பி வரையிலான மின் மோட்டார்களுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, சுமார் 50,000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மொத்தமாக ரூ.1,250 கோடிக்கும் மேல் மின்வாரியத்திடம் கட்டப்பட்டும், பல மாதங்களாக இணைப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், விவசாயிகள் பெரும் வட்டி சுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

வணிக நிறுவனங்களுக்கு 90 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு மட்டும் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

எனவே தமிழக அரசு – மின் இணைப்புக்கு தட்கல் முறையில் பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்(மூ) வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply