நிலையான போக்குவரத்து அமைப்புகளைக் கட்டமைப்பதில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

நிலையான, மீள்திறன் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான போக்குவரத்து அமைப்புகளைக் கட்டமைப்பதற்காக பிரிக்ஸ் நாடுகளிடையே ஆழமான ஒத்துழைப்புத் தேவை என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் நாக்பூரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய திரு நிதின் கட்கரி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள், தூதுக்குழுத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பிரதிநிதிகளை நாக்பூருக்கு வரவேற்றார்.

உலகின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பானது, நிலையான பொருளாதார வளர்ச்சியையும், பிராந்திய இணைப்பையும் மேம்படுத்தும் அதே வேளையில், தூய்மையான, பாதுகாப்பான, அறிவார்ந்த, திறமையான போக்குவரத்து அமைப்புகளின் வளர்ச்சியில் தனித்துவமான நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்துதான் முதுகெலும்பு என்பதை வலியுறுத்திய திரு நிதின் கட்கரி, சாலை, ரயில், கடல், விமானப் போக்குவரத்துத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள விரைவான மாற்றத்தை எடுத்துரைத்தார். உலகின் இரண்டாவது பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளதோடு, கட்டுப்பாட்டு விரைவுச்சாலைகளையும் பல்முனை இணைப்பு வசதிகளையும் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம், சோனமார்க் சுரங்கப்பாதை, 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய விரைவுச்சாலைகள் போன்ற திட்டங்களைக் குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்பு மேம்பாட்டை புத்தாக்கத்துடன் இணைப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்த முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன என்றார்.

நிலையான போக்குவரத்துக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த திரு கட்கரி, மின்சாரப் பேருந்துகளின் பயன்பாடு, பசுமை நகர்ப்புறப் போக்குவரத்துத் திட்டம், பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதில் ‘உடான்’ முன்முயற்சியின் வெற்றி ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் போக்குவரத்து உத்தியில் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் மையமாகத் தொடர்கின்றன என்று மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் நிலையான, வளமான எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் போக்குவரத்து அமைப்புகளைக் கட்டமைக்கவும், பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் திரு நிதின் கட்கரி அழைப்பு விடுத்தார்.

Leave a Reply