தமிழக அரசு கைத்தறி துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கூட்டுறவு நெசவாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு – கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வதற்கும், பட்டு கூட்டுறவு சங்கங்களில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் உள்ளீடு அளவுகள் பழைய நிலையிலே தொடரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

=============== #அறிக்கை ==============

தமிழக அரசு கைத்தறி துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கூட்டுறவு நெசவாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பட்டுச்சேலை தயாரிக்கும் போது வெள்ளி ஜரிகையின் பயன்பாட்டைப் பொருத்தே புடவையின் மதிப்பு உயர்கிறது.

தற்போது தங்கம், வெள்ளி விலை உயர்வால் ஜரிகையின் விலை உயர்ந்து புடவையின் விலை புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இதனால் ஜரிகையின் உள்ளீடு அளவுகள் மாற்றப்பட்டு, விலை வித்தியாசத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை.

40% வெள்ளி ஜரிகைக்கும், 30% வெள்ளி ஜரிகைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு மார்க்கிற்கு ரூ.8,000/- வரை உள்ளது. ஆனால் 40% வெள்ளி ஜரிகை புடவைக்கு உள்ள பளபளப்பு தன்மை 30% வெள்ளி ஜரிகைக்கு கிடைக்கவில்லை.

எனவே தமிழக அரசு 40% வெள்ளி ஜரிகை திருபுவனம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற பட்டு கூட்டுறவு சங்கங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கி, கைத்தறியின் சிறந்த வியாபாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கைத்தறி துணி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதால் கைத்தறி துணிகளின் விலை உயர்ந்து விற்பனை பாதிக்கிறது.

எனவே பட்டு, பாவு ஜரிகைக்கு ஜி.எஸ்.டி வரியை முற்றிலும் ரத்து செய்து கைத்தறி தொழிலை, நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும்.

ஜரிகை உள்ளீடு அளவுகள் மாறியபோது தமிழ்நாடு ஜரிகை ஆலை உற்பத்தியை நிறுத்தியதால் சூரத் ஜரிகை கொள்முதல் செய்யப்பட்டது.

சூரத் ஜரிகை போல் தமிழ்நாடு ஜரிகை பளபளப்பு தன்மை எதிர்பார்க்கும் நிலையில் இல்லை.

குறிப்பாக தமிழ்நாடு ஜரிகை 60%, சூரத் ஜரிகை 40% என்றால் மாதம் 300 மார்க் தமிழ்நாடு ஜரிகை கொள்முதல் செய்யும்போது ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே எண்பது இலட்சம் வரை சங்கத்திற்கு இழப்பு ஏற்படுகிற நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு தமிழ்நாடு ஜரிகை பயன்பாட்டில் புடவையின் விலை ஏற்றத்தினையும், சங்கத்திற்கு ஏற்படும் நிதி இழப்பையும் கருத்தில் கொண்டு, புடவையின் பளபளப்பு தன்மையின் நேர்த்தியினை கருத்தில் கொண்டு கூடுதலாக சூரத் (வெளிச்சந்தை) ஜரிகை கூட்டுறவு சங்கத்தில் (50-50) பயன்படுத்துவதற்கு வழிவகை செய்து தருமாறும் கூட்டுறவு நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply