ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரம் மற்றும் பராமரிப்பு முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
புது தில்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர்கள் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் திரு அஜய் தம்டா ஆகியோருடன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் திட்ட ஒப்பந்ததாரர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, திரு நிதின் கட்கரி அவர்கள் கர்நாடகாவில் உள்ள 7,926 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கேரளாவில் உள்ள 61 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் பரவியுள்ள 1,513 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் தரம் மற்றும் பராமரிப்பு முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
நீடித்த மற்றும் திறமையான நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காக, பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுதல், கடுமையான தரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திரு நிதின் கட்கரி வலியுறுத்தினார். மேலும், சொத்துக்களின் ஆயுளை அதிகரிக்கவும், பயணத் தரத்தை மேம்படுத்தவும், முக்கிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் தடையற்ற இணைப்பை உறுதி செய்யவும், களப்பணிகளை விரைவுபடுத்துதல், தரக் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நவீன கட்டுமான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பருவமழைக் காலத்திற்கு முன்னதாக முழுமையான தயார்நிலையை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். நெடுஞ்சாலை வலையமைப்பு முழுவதும் சாலைப் பாதுகாப்பு, கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் தடையற்ற போக்குவரத்து இயக்கத்தைப் பராமரிக்க, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வலுவான பதில் அமைப்புகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
பருவமழைக் காலத்தில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விரிவான வடிகால் மேலாண்மை, சரிவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விரைவான பதிலளிப்பு வழிமுறைகளை நிறுவுதல் உள்ளிட்ட முன்கூட்டிய திட்டமிடலை மேற்கொள்ளுமாறு திரு நிதின் கட்கரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
