சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.2.2026) செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் வரி 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்பட்டு, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பளவில் 2002-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் 14,000 கோடி ரூபாய் முதலீட்டையும் ஈர்த்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நாவலூர் ஏரி வறண்டு போகும் நிலையில் இருந்தபோது, சிப்காட் முழு அளவிலான மாற்றத்தை உருவாக்கிட முன் நின்றது. தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள். புல்வெளிகளுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்தும், 30 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply