கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்ட ஒருபோதும் அனுமதிக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை துரிதமாக தமிழக அரசு எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணை பிரச்சனையில் மெத்தனப் போக்காக இருக்கிறது.

இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடகா அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதோடு தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணைக் கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

மேகதாது அணைக் கட்ட அனுமதித்தால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் மேகதாது அணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உ உடனடியாக எடுக்கவேண்டும். காவிரி தண்ணீர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தி.மு.க அரசு, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், இங்கு கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கோடு செயல்படாமல், தமிழக மக்களின் குறிப்பாக டெல்டா விவசாயிகளின் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மேகதாது அணைக்கட்ட ஒருபோதும் அனுமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply