தித்வா புயலின் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து, விவசாய நிலங்கள் தண்ணீரில் முழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 28-ஆம் தேதியில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர் வாராதால் தான் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.
தற்பொழுது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், கார்த்திகை பட்டம் என்று சொல்லக் கூடிய உளுந்து, பயறு, சோளம் மற்றும் நிலக்கடலை பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி அழுகி மீளா துயரத்தில் விவசாயிகள் உள்ளார்கள்.
2025 -ஆண்டில் இரண்டாவது முறையாக புயலின் தாக்கத்தால் டெல்டா மண்டல விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகுந்த துயரத்தையும், நஷ்டத்தையும் அடைந்துள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
