டித்வா புயல் பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், டித்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
டித்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டித்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சி.கார்த்திகேயன்
