கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!தமிழ் மண்ணில் மிருகத்தனமானக் குற்றங்கள்..! -தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்.

தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்.

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர்,
நள்ளிரவில் தன் ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த போது கடத்திச் சென்று, கொடூரத் தாக்குதல் நடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இச்சம்பவம், தமிழ்நாட்டில் தங்களுக்கான பாதுகாப்பு குறைந்து கொண்டே வருவதாக பெண்களிடையே அச்ச உணர்வு எழுவதை அரசு தடுக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் தொடங்கி, அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இரவு பகல் எந்நேரத்திலும் தம் அன்றாட அலுவல்களை மேற்கொள்ள அரசு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ் மண்ணில் இப்படிப்பட்ட மிருகத்தனமானக் குற்றங்கள் நடப்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது!

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கும், தாக்குதலுக்கு ஆளான அவரது நண்பருக்கும் உரிய நீதியை அரசாங்கம் வழங்க வேண்டும்.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அந்தக் காட்டுமிராண்டிகள் எவராக இருந்தாலும், அவர்களைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை மெத்தனப் போக்கு காட்டக்கூடாது.
குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் மீது தற்போதைய சட்டத்திலேயே உள்ளக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் அமைத்து, அதிகபட்சத் தண்டனையே வழங்கப்பட வேண்டும்.

அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல், தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply