ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்களுக்கு காசோலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.10.2025) முகாம் அலுவலகத்தில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோரை பாராட்டி, ஊக்கத்தொகையாக தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதலமைச்சர் , தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இன்றையதினம் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் 19.10.2025 முதல் 23.10.2025 வரை நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமானது.

சுற்றுப்போட்டித் தொடராக (Round Robin) நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஏழு நாடுகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு ஏழு அணிகள் ரவுண்ட் ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இரண்டிலும் அசத்தலான ஆட்டங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு திறமையான கபடி வீரர்கள் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்த செல்வி கார்த்திகா ரமேஷ் (பெண்கள் பிரிவு) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான முக்கிய வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அபினேஷ் மோகன்தாஸ் என்பவர் 2019 முதல் 2025 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேனியில் உள்ள விளையாட்டு விடுதியில் முறையான பயிற்சி பெற்று தனது திறனில் முன்னேற்றம் கண்டுள்ளார். சென்னை, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் செல்வி கார்த்திகா ரமேஷ் என்பவர் தேசிய அளவிலான SGFI, Khelo India மற்றும் Federation Nationals உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டிற்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்ற சிறப்புடைய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.

Leave a Reply