கடலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் களை எடுக்கும் பணியின் போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகில் உள்ள கழுதூர் கிராம பகுதியில் மக்காச்சோளம் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையின் காரணமாக மின்னல் தாக்கி கழுதூர் கிராமத்தை சேர்ந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கனிதா ஆகிய நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றொரு பெண் இரண்டு கண்களும் பார்வை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றாடம் விவசாய கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த இந்த பெண்கள் இன்று எதிர்பாராத விதமாக இயற்கையின் விபரீதத்தால் மின்னல் தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், மேலும் மின்னல் தாக்கியதில் கண் பார்வை இழந்த பெண்ணுக்கு உயர்தர இலவச மருத்துவ சிகிச்சையும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயத் தொழிலை உயிராக நினைத்துப் பூர்வீகமாக செய்து வரும் விவசாயக் கூலி தொழிலாளர்களின் துயரத்தில் பங்கெடுப்பதும்: அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதும்; அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு போர்க்கால அடிப்படையில் உதவி செய்வதும் மிக மிக அவசியம்.

Leave a Reply