தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த அறிவித்தது.
காரணம் ஊதிய உயர்வு வெளிப்படைத்தன்மையுடன் சங்கங்களை வகைப்பாடு செய்யாமல் லாப நட்டங்களை கணக்கில் கொள்ளாமல் 31.03.2018 ஆம் தேதி ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் 31.03.2023 ஆம் தேதி பெற்று வந்த சம்பளத்தின் மீது 20 % ஊதிய உயர்வு அனைவருக்கும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
தவணைத் தவறிய நகைக்கடன் ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட நட்டத்தை செயலாளர் தலையில் சுமத்தி ஓய்வு கால நிதி பயன்களில் பிடித்தம் செய்யப்பட்டு வருவது கைவிடப்படுவதுடன் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை திருப்பி வழங்க வேண்டும்.
தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூபாய் 1000 க்கு விற்பனை செய்து ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்.
மகளிர் பணி புரியும் இடங்களில் அவசியம் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்,
விற்பனையாளர்களாக பணியில் சேர்பவர்களுக்கு தொகுப்பூதியம் இல்லாமல் காலம் வரை ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும் – உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இச்சூழலில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 1154 கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
தற்போதைய வேலை நிறுத்த போராட்டத்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயவிலைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொது மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் உள்ளிட்ட கடன் பெற வருபவர்களுக்கும், கடனுக்கு வட்டி செலுத்த வருபவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டு பெரும் சிரமம் ஏற்படும். கடனும் உரிய காலத்தில் கிடைக்காமல், உரிய காலத்தில் வட்டியும் செலுத்த முடியாததால் கடனும் கொடுக்காமல், கூடுதல் வட்டியும் கட்ட வேண்டி வரும்.
எனவே தமிழக அரசு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக விடுக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை அவர்களின் நலன் கருதியும், விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களின் நலன் கருதியும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
