தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.8.2025) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிறுவனமானது திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதாகும். இவ்வரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.1.58 கோடி செலவில் இப்பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கம், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு, மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்காக ரூ.25 இலட்சம் செலவில் உணவு அருந்தும் அறையும் அமைக்கப்பட்டது.
சி.கார்த்திகேயன்
