மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்தது.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 450 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் திங்கட்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, விரட்டியடித்து, மீன்களை அபகரித்துச் சென்றனர். மீனவர்களின் வலைகளை வெட்டினர். இந்நிலையில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை காலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல இலட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மீனவக்குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து வருமானம் ஈட்டுவதற்காக சென்ற மீனவர்கள் நஷ்டம் அடைவது என்பது பெரிதும் கவலைக்குரியது

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நலிவடைந்துள்ளது.

எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மத்திய மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நல்ல தீர்வு காண வேண்டும். மேலும் மத்திய அரசு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.

தமிழக அரசு மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மீனவக்குடும்பங்களுக்கு துணை நிற்பதும் மத்திய மாநில அரசுகளின் கடமையாகும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு‌ தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply