திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் (இன்று 14.06.2025) தற்போது நடைபெற்று வரும் “மதச்சார்பின்மை காப்போம் பேரணியில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) *இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம்!
1976 ஆம் ஆண்டு 42 -ஆவது திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோஷலிஸ்ட்’ ‘செக்யூலர்’ ஆகிய சொற்களை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனாலும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘செக்யூலர்’ என்ற சொல்லை நீக்கவேண்டுமென்றும்; இந்தியாவை இந்து மதச் சார்புகொண்ட “இந்து ராஷ்டிரம்” என அறிவிக்க வேண்டுமென்றும் பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
இந்தியா மதச் சார்புகொண்ட நாடாக மாற்றப்பட்டால் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகள் யாவும் பறிபோய்விடும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சனநாயகம் போன்ற யாவும் ஒழிக்கப்பட்டுவிடும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்துள்ள இன்றைய அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்படும். மனுவாத ஆட்சி மீண்டும் நிறுவப்படும். இந்தியா என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு- தாழ்வு என்னும் பாகுபாடுகள் மலிந்த, மதம் சார்ந்த இந்துத்துவ ஃபாசிச நாடாக நிலைப்படுத்தப்படும்.
எனவே, ‘மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல ‘ -என, சிறுத்தைகளின் இந்தப் பெருந்திரள் பேரணி மிகுந்த உறுதியோடு ஓங்கி உரத்து அறிவிக்கிறது.
இந்தியாவை மதச் சார்பு கொண்ட நாடாக மாற்றுவதற்கு செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுத்து முறியடிப்போம்! புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டம் கூறுவதுபோல் இந்தியாவை மதச் சார்பற்ற நாடாகவே பாதுகாப்போம்! என அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
2) *வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், இசுலாமியர்களுக்கான தனிச்சட்டத்திற்கு எதிராகவும் அனைத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அடாவடியாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘வக்ஃபு திருத்தச் சட்டத்தை’ உடனே திரும்பப் பெற வேண்டுமென இந்தப் பேரணியின் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
அத்துடன், அந்த சட்டத்துக்கு எதிராக அண்மையில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க வேண்டுமெனவும் இந்தப் பேரணி உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
3) *குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்கனவே இதே பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் தீவிரமான எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் நிறைவேற்றிய ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்’ இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். குறிப்பாக, மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அத்துடன், இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கிட இந்த திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது. முஸ்லீம்களுக்கு எதிரான இந்த அப்பட்டமான பாகுபாட்டை ஐநா மனித உரிமை கவுன்சிலின் ஐநா பொதுச் செயலாளரும் கண்டித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் இது மதரீதியான வன்முறைக்கு வழிகோலும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்தியா முழுவதும் சனநாயக சக்திகள் அதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தின. ஆனாலும் அந்தச் சட்டத்தைத் திரும்ப பெற மோடி அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இந்தப் பேரணி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
4)*தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ( NPR), தேசிய குடிமக்கள் பேரேடு ( NRC) ஆகியன தயாரிப்பதைக் கைவிட வேண்டும்!
‘2021 இல் மேற்கொள்ளப்படாமல் ஒத்திப்போடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கை 2027 இல் மேற்கொள்ளப்படும், அது சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக இருக்கும்’ என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டையும் (NPR) தேசிய குடிமக்கள் பேரேட்டையும் ( NRC) தயாரிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ( CAA) அடிப்படையில் இவை செய்யப்படவுள்ளன. அதன்மூலம் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான இந்திய குடிமக்களை நாடற்றவர்கள் என அறிவிப்பதற்கு மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அது மக்களைப் பிளவுபடுத்தி மிகப்பெரிய உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தக் கொடுமையான பாசிசத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என இந்தப் பேரணி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
5)*மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!
மதத்தின் பெயரால் ஏவப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிறப்புச் சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட காரணத்தால் மதவாத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதா, சட்டம் ஆக்கப்படாமலேயே 2014 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மத அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என ஒன்றிய அரசை இந்தப் பேரணி வலியுறுத்துகிறது
6)*கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அறிவித்திட வேண்டும்!
பாஜக ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு இஸ்லாமியர்களை சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கும்பலாகச் சென்று பொது வெளியிலேயே அடித்து கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை கடுமையாகத் தண்டிக்காமல் விடுவதால் மீண்டும் மீண்டும் அத்தகைய வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, கும்பல் கொலைகளைப் பயங்கரவாதக் குற்றங்களாக அறிவித்து, அத்தகைய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணி வலியுறுத்துகிறது.
7)*ஜம்மு- காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும்!
அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கு இருந்த சிறப்புத் தகுதியை விலக்கும் வகையில், அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண்-370 ஐ மோடி அரசு நீக்கம் செய்தது. அதாவது, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு மாறாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்து, அந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண்-370 ஐ நீக்கினார்கள். அம்மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடினார்கள். அதனைத் தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்பின் விளைவாகக் ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்படுமென என்று மோடி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அது நிறைவேற்றப்பட்ட வில்லை. எனவே, மேலும் காலம் கடத்தாமல் ஜம்மு- காஷ்மீருக்கு மாநிலத் தகுதி அளிக்கும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தப் பேரணி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது
8) *மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும்!
இந்து மதத்திலிருந்து சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதங்களைத் தழுவுகிற பட்டியல் சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இது அரசமைப்புச் சட்ட உறுப்பு எண்-25 இல் உறுதி செய்யப்பட்டுள்ள மத அடிப்படையிலான சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது. ஒருவர் எந்த மதத்தைத் தழுவினாலும் அவருக்கு முன்பு என்ன உரிமைகள் இருந்ததோ அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை மதம் மாறிய பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மறுக்கக்கூடாது. அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திட உரிய சட்டம் இயற்ற வேண்டும் என இந்தப் பேரணி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
கிறித்தவத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்டோரையும், பட்டியல் சமூகத்தினரையும் தமிழ்நாடு அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் வைத்து தற்போது இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அது போதுமானதாக இல்லை. எனவே, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தனியே உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இந்தப் பேரணி கேட்டுக்கொள்கிறது.
9)*சமவாய்ப்பு ஆணையத்தை அமைத்திட வேண்டும்!
நீதியரசர் இராஜேந்திர சச்சார் ஆணையம் அளித்த பரிந்துரைகளில் முக்கியமானது “சமவாய்ப்பு ஆணையம்” உருவாக்குவது பற்றியதாகும்.
“அனைத்து சமயத்தினரும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமமான வாய்ப்புப் பெறுவதை அரசாங்கம் உத்தரவாதம் செய்யவேண்டும். அதற்காகத் தனியே ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதை செயல்படுத்துவதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்று நீதியரசர் சச்சார் குழு பரிந்துரைத்தது. ஆனால், அதனை இதுவரை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. அந்த ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. எனவே, சச்சார் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சமவாய்ப்பு ஆணையத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை இந்தப் பேரணி கேட்டுக்கொள்கிறது.
10) * பீகார் மாநிலம் புத்தகயாவிலுள்ள மகா போதி விகாரையைப் பௌத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!
கௌதம புத்தர் ஞானம் பெற்ற புனிதத் தலமாகப் போற்றப்படும் புத்தகயாவிலுள்ள ‘மகாபோதி விகாரையின்’ நிர்வாகத்தில் இந்துக்களான பிராமணர்களும் இடம்பெற்றுள்ளனர். அது பௌத்தர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிப்பதாகவுள்ளது. எனவே, அந்த நிர்வாகத்திலிருந்து இந்துக்களான பிராமணர்களை நீக்கி, பௌத்தர்களிடமே அந்த நிர்வாகத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புத்த பிக்குகளின் தொடர் போராட்டம் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பௌத்தர்களின் உணர்வுகளை மதித்து, கோரிக்கையை ஏற்று, மகாபோதி விகாரை நிர்வாகத்தை பௌத்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.
11) *வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது!
இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலை தொடர வேண்டும் என்பதற்காக ‘வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம்’ இயற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தின் நிபந்தனைகளுக்கு முரணாக பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வெற்றியில் ருசி கண்ட சங்கப் பரிவாரத்தினர் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான பல்வேறு மசூதிகளை இந்துக் கோயில்கள் என உரிமை கொண்டாடி வழக்குகளைத் தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும்; வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது என்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இந்தப் பேரணி வேண்டுகோள் விடுக்கிறது.
12)*பொது சிவில் சட்டம் ( UCC) கொண்டுவரும் முயற்சியைக் கைவிட வேண்டும்!
ஒன்றிய பாஜக அரசு இந்தியாவில்
பொது சிவில் சட்டத்தைக் (UCC) கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகிறது. 2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட சட்ட ஆணையத்தின் 21வது அறிக்கையில், “பொது சிவில் சட்டம் இந்த கட்டத்தில் அவசியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி பொது சிவில் சட்டம் என்னும் ஆர்.எஸ்.எஸ்சின் திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு முனைப்பாக உள்ளது. இது தேசத்தின் நலன்களுக்கு எதிரானது. எனவே, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என இந்தப் பேரணி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
-கே. பி. சுகுமார், B.E., ullatchithagaval@gmail.com
