ஆன்லைன் சூதாட்ட விளையாட்டானது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பாதகமானது!- ஜி.கே.வாசன் அறிக்கை.

ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டால் பலதரப்பட்ட மக்கள் பணத்தை இழந்ததும், உயிரை இழந்ததும் அனைவருக்கும் தெரியும்.

2022 இல் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழக அரசு ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றியது.

2023 பிப்ரவரி 14 ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகள் வெளியிடப்பட்டன.

இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதில் 18 வயதுக்குட்பட்டோர் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுகளை தடை செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு இருந்தாலும் சரி, விதிமுறைகள் இல்லாவிட்டாலும் சரி ஆன்லைனில் மூழ்கிவிட்டால் அதற்கான கால நேரம் நிர்ணயித்தாலும் கூட அதில் ஈடுபடத் தான் முன்வருவார்கள்.

அதாவது ஆன்லைன் விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டால் மனம் அதில் மூழ்கி, தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடும் என்று ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டவர்களே சொல்கிறார்கள்.

குறிப்பாக ஆன்லைன் விளையாட்டு சூதாட்ட விளையாட்டாக அமைந்து மாணவர்கள், இளைஞர்கள், முதிர்ந்தவர்கள் ஆகியோர் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு, பாதிக்கப்பட அதிக வாய்ப்புண்டு.

எனவே மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் விதிமுறைகள் இருந்தாலும் அது மனித இனத்திற்கு தீமை விளைவிக்க வழி வகுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை இருப்பது தான் மக்கள் நலனுக்கும், மாநில முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது என்பதற்காக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு முழுமையான தடை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply