சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். உத்திரப்பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பெரம்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாயாவதி அஞ்சலி செலுத்தியபோது விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் பா.ரஞ்சித் உடன் உள்ளனர். மாயாவதி வருகையையொட்டி பெரம்பூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆமஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆறுதல் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் செல்வி. மாயாவதி தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி செய்யும். அவரது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியினர் தமிழ்நாடு அரசிடம் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டி அளித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
