தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம்!

S4240015 S4240013 S4240011 S4240010 S4240009 S4240005

தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும்; வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் தேசியப் பேரியக்கம் சார்பில், திருவெறும்பூர் பெல் (BHEL) தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டதில் ஈடுப்பட்டனர்.

இந்திய அரசு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 80 சதவீத பேர் வெளி மாநில தொழிலாளர்களை நியமித்துள்ளது.

திருவெறும்பூர், திருமயம், ராணி பேட்டை பெல் (BHEL) நிறுவனத்தில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலத்தவர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். உயர் கல்வி தகுதி இருந்தும், தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

இதேப்போல் இரயில்வே, விமான நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஓன்சிசி, ஐஓசி, துறைமுகம், வருமானவரி, சுங்கவரி போன்ற நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தவர் உள்ளனர்.

கர்நாடகா, குஜராத், மராட்டியம், மேற்குவங்கம், அரியான, ஜார்கண்ட்… உள்ளிட்ட மாநிலங்களில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மத்திய அரசு நிறுவனம் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனத்திலும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே மாநில தொழிற்சாலை துறை அமைச்சகம் ஆணைப்படி பணி அமர்த்த சட்டம் ஏற்பாடு உள்ளது.

உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில், மண்ணின் மக்களுக்கு 80 முதல் 90 சதவீதம் வேலை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், பாஜக, இராட்டிரிய ஜனதாதளம் போன்ற முன்னனி கட்சிகள் வைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் 1967-ல் இருந்து ஆட்சி செய்யும் திமுக, அதிமுக கட்சிகள் மற்ற மாநிலங்களில் இருப்பது போல், மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி படுத்தவதில் எந்த வித அக்கறையும் எடுத்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உள்ளிட்ட கல்வியை பெற்றவர்கள் 90 லட்சம் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசு நிறுவனம், மாநில நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் தமிழர்களையே பணி அமர்த்த வேண்டும். 10 சதவீதத்திற்கு மேல் அரசு அலுவலகங்களில் பணியில் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில், திருவெறும்பூர் பெல் (BHEL) நிறுவனம் முன்பும், சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை முன்பும் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.

பெல் நிறுவனம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் வைகறை தலைமை வகித்தார் போராட்டம் நடத்தும் போது தமிழ்தேசிய பேரியகத்தினர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் பெல் பயிற்சி மையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை, திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.