சேலத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமாக ஏற்காடு மஞ்சக்குட்டை கிராமத்தில் ஏழரை ஏக்கர் காப்பி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் காப்பி, மிளகு, சில்வர் ஓக் மரங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த நிறுவனத்திற்கு ஜெயராஜ் கிருஷ்ணன் என்பவர் நிறுவன தலைவராக உள்ளார்.
மஞ்சக்குட்டை கிராமத்தில் இருக்கும் ஏழரை ஏக்கர் தோட்டத்திற்கு, மஞ்சக்குட்டை கிராமத்தை சேர்ந்த வெள்ளயைன் மகன் பொன்ராஜ் (வயது 40) என்பவர் காவலாளியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
கடந்த 5 மாதங்களாக இந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தோட்டத்தை கவனிக்க வரவில்லை. காவலாளி பொன்ராஜூம் கடந்த 3 மாதங்களாக சம்பளம் பெற நிறுவனத்திற்கும் செல்லவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தங்கள் தோட்டத்ததில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக நிறுவன தலைவர் ஜெயராஜூக்கு தகவல் கிடைத்து, அவர் தோட்டத்தை சென்று பார்க்கும்போது சுமார் 2 கோடி மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில், காவலாளி பொன்ராஜ் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெயராஜ் புகார் அளித்தார். இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் காவல் துறையினர், ஏற்காடு வருவாய் துறையினர் உதவியுடன் ஏற்காட்டில் உள்ள அந்த தோட்டத்திற்கு வந்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மஞ்சக்குட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கூறியதாவது:
“இங்கு, கடந்த ஜீன் மாதத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட தகவல் கிடைத்து, ஆய்வு செய்து இது குறித்து ஜீன் 11- ஆம் தேதி அப்போது ஏற்காடு வட்டாட்சியராக இருந்த மணிவண்ணனிடம் அறிக்கை கொடுத்துள்ளேன். ” என்று கூறினார்.
-நவீன்குமார்.
