கருணாநிதி கட்டுப்பாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம்!

Kovan meets DMK President MKkovan with karunanidhiமதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி வருவதாக மார்தட்டி கொள்ளும் மக்கள் கலை இலக்கியக் கழக நிர்வாகிகள். இன்று (26.11.2015) சென்னை கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலின் உதவியுடன், திமுக தலைவர் மு.கருணாநிதியை நேரில் சந்தித்து தங்கள் நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தி, அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.

சட்ட ரீதியாகவோ, ஜனநாயக ரீதியாகவோ மதுவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோ அல்லது மக்களைத் திரட்டிப் போராடுவது என்பதோ, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் நோக்கமல்ல.

அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம் என்றால், தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.கருணாநிதி இருந்தபோது, தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லையா? அப்போது அரசு மதுக்கடைகளை அடித்து நொறுக்க வேண்டியதுதானே? அப்போது இவர்கள் என்ன  செவ்வாய் கிரகத்திலேயா குடியிருந்தார்கள்?

அவ்வளவு ஏன், முதன் முதலில் தமிழகத்தில் மதுக்கடைகளை கொண்டு வந்ததே முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதிதானே! தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த மதுவிலக்கை ரத்து செய்து, மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி 1971-ல் மதுபானக்கடைகளைத் திறந்ததால், அதுவரை குடிப்பழக்கத்தையே அறியாத இளையத்தலைமுறையினரும் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இதற்கு முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி சொன்னக் காரணம் என்ன தெரியுமா?

‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?”

என்று சட்டமன்றத்தில் விளக்கமளித்தார். தமிழகத்தில் மது விலக்கை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதாவது, மதுக்கடைகள் அதிகாரப் பூர்வமாகத் திறப்பதற்கு வழிவகுத்தார்.

மேலும், 1989-ல் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது, மலிவு விலை மது என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, சாராயம் போலத் தூக்கலாகவும் இல்லாமல், பிராந்தி-விஸ்கி போல மிதமாகவும் இல்லாமல் தரத்திலும் விலையிலும் நடுத்தரமான சரக்கு கொடுத்தவர்தான் இந்த முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி. 

அன்று மு.கருணாநிதி நட்டுவைத்த மதுக்கடை என்னும் விஷச்செடி, இப்போது வீழ்த்த முடியாத அளவு வேர்விட்டு வளர்ந்து நிற்கிறது.

ம.க.இ.க – வைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் கோவன், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியை இன்று சந்தித்திருப்பதன் மூலம், இவர்களுடைய அந்தரங்கம் அம்பலமாகியுள்ளது. முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி பாணியில் சொல்ல வேண்டுமானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. 

ஆக இந்த மது ஒழிப்பு நாடகம் மூலம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவமானப்படுத்த வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரது தலைமையிலான கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற  கெட்ட நோக்கத்திற்காக தீட்டப்பட்ட சதி திட்டம் தான், இந்த “மதுக்கடை ஒழிப்பு பிரச்சாரம்” என்பது தெள்ளத்தெளிவாக இதன் மூலம் தெரிகிறது. 

 – டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com