லஞ்சம் வாங்கிய அமைச்சர் ஆசிம் அகமது கான் அதிரடி நீக்கம்!எனது மகன் லஞ்சம் வாங்கினால்கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன்! -டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

Aam Aadmi Party Leader of Arvind Kejriwal

டெல்லி சுற்றுச்சூழல், உணவு விநியோகத் துறை அமைச்சர் ஆசிம் அகமது கான் கட்டுமான நிறுவன அதிபரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதால் அவரை நீக்கம் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய அமைச்சர் ஆசிம் அகமது கான்.

லஞ்சம் வாங்கிய அமைச்சர் ஆசிம் அகமது கான்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,
கட்டுமான தொழிலதிபர் ஒருவரிடம் உணவுத் துறை அமைச்சர் ஆசிம் அகமது கான் லஞ்சம் கோரியதாக அரசுக்கு  புகார் வந்தது.  அதற்கு ஆதாரமாக அமைச்சரின் உரையாடல் அடங்கிய ஆடியோ இணைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ஆசிம் அகமது கானின் சொந்த தொகுதியான மதியா மஹாலில் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் அடுக்குமாடி கட்டடம் கட்டி வருகிறார். அந்தக் கட்டடப் பணிகள் தடையின்றி தொடர வேண்டுமானால், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மிரட்டியுள்ளார்.

அதன்படி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அதிபரும் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். இதில் இடைத்தரகராக ஒருவர் செயல்பட்டுள்ளார். புகாராக அனுப்பப்பட்ட ஆடியோவை ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் பதவியில் இருந்து அகமது கானை நீக்க முடிவு செய்தோம்.

லஞ்ச, ஊழல் விவகாரங்களை ஆம் ஆத்மி அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. எனது மகன் லஞ்சம் வாங்கினால்கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதாக தெரியவந்தால் கூட தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல நான் ஊழலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் மணிஷ் சிசோடியா நடவடிக்கை எடுப்பார்.

லஞ்சப் புகாரில் சிக்குபவர்கள் யாராக இருந்தாலும் தப்பவிட மாட்டோம். அமைச்சர், எம்.எல்.ஏ. ஆக இருந்தால்கூட ஆதாரம் கொடுத்தால் அவர்களை நீக்குவது உறுதி. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆசிம் அகமது கானுக்கு பதிலாக அமைச்சரவையில் பல்லிமாரன் தொகுதி எம்.எல்.ஏ. இம்ரான் உசேன் சேர்க்கப்படுவார்.

லஞ்ச, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி முன்னோடியாகச் செயல்படுகிறது. இதை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.