“அவுட்லுக்” (OUTLOOK) ஆங்கில பத்திரிகைக்கு, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நோட்டீஸ்!

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால்.

அழகை காட்டி பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று, ஆபாசமாக செய்தி மற்றும் கேலிச்சித்திரம் வெளியிட்ட “அவுட்லுக்” (OUTLOOK) ஆங்கில பத்திரிகைக்கு, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

outlook-b

Outlook

Smitha-Sabharwal-Outlook-1

தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் முதல்வர் சந்திரசேகர ராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால், தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல “அவுட்லுக்” (OUTLOOK) ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டது. அவரது பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல், பதவி உயர்வு வாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சி தொடர்பாக கேலிச்சித்திரமும் வெளியிட்டுள்ளது.

இது தெலங்கானா மாநில அதிகாரிகளிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் ஆவேசம் அடைந்தார். என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தி வெளியிட்ட “அவுட்லுக்” (OUTLOOK) இதழுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

“என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் நிபந்தனையும் விதித்துள்ளார்.

மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா சபர்வால், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 4 ஆவதாகத் தேர்ச்சி பெற்றார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு, அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலன் சார்ந்த விசயங்களிலோ, அரசு துறை சார்ந்த விசயங்களிலோ அல்லது அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக முறைக்கேடுகளில் ஈடுப்பட்டு குறுக்கு வழியில் ஸ்மிதா சபர்வால் பதவி உயர்வு பெற்று இருந்தால், அதை ஆதாரப்பூர்வமாக பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாம்.

ஆனால், தனது நேர்மையான செயல்பாட்டின் மூலம் “மக்களின் அதிகாரி” என்று பெயர் எடுத்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, அழகை காட்டி பதவி உயர்வு பெற்றார் என்று, ஆபாசமாக செய்தி வெளியிட்டு இருப்பது எந்த வகையில் நியாயம்?

வதந்திகளை  செய்திகளாக வெளியிட்டு வருமானம் பார்ப்பதும், ஆபாசத்தை விற்று பிழைப்பு நடத்துவதும் “அவுட்லுக்”(OUTLOOK) நிர்வாகத்திற்கு வாடிக்கையாகிவிட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in