தமிழகத்தின் முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார்!

pr230515a pr230515b

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா இன்று 5-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சரைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.37 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து ஜெ.ஜெயலலிதா புறப்பட்டார்.

விழா மண்டபத்தை அடைந்த ஜெ.ஜெயலலிதா, தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரின் வாழ்த்தொலிக்கிடையே, தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார்.

பின்னர் கூடியிருந்த பிரமுகர்களுக்கு இருகரம் குவித்து வணக்கம் தெரிவித்தார். சரியாக காலை 11.03 மணிக்கு ஆளுநர் ரோசய்யா விழா மண்டபத்திற்கு வருகை தந்தார். ஆளுநரின் வருகையை அறிவிக்கும் வகையில் ஒலி எழுப்பப்பட்டது.

ஆளுநரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு வருகை தந்த ஆளுநருக்கு, ஜெ.ஜெயலலிதா மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின்னர் புதிதாக பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களை ஜெ.ஜெயலலிதா, ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின்னர், பதவியேற்பு விழா தொடங்கியது. பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாண வாசகங்கள் அடங்கிய ஆவணம் ஜெ.ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.

முதலில் ஜெ.ஜெயலலிதாவின் பெயரை தலைமைச் செயலாளர் அறிவித்தார். இதனையடுத்து, ஆளுநர் பதவியேற்பு உறுதிமொழியை வாசிக்க, அதனை திரும்பச் சொல்லி, ஜெ.ஜெயலலிதா, 5-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர், ஜெ.ஜெயலலிதா உரிய படிவங்களில் கையெழுத்திட்டார். பின்னர், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவைத் தொடர்ந்து, அமைச்சர்கள் 2 பிரிவாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, ஆளுநர் மற்றும் அனைத்து அமைச்சர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in