தமிழக அரசு, மாநிலம் முழுவதும் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்குகின்ற பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடில்லாமல் காலத்தே வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பிரதிமாதம் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஆகிறது என்றும் பொருட்களின் அளவும், தரமும் குறைவாக இருப்பதாகவும் பொது மக்கள் குறை கூறுகின்றனர். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பாக பருப்பு மற்றும் ஆயில் தட்டுப்பாடு அவ்வப்போது உள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கவனத்தில் கொண்டு காலத்தே கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் வழங்கும் அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் இதர கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. நியாய விலைக் கடைகளில் இருந்து கள்ளச்சந்தைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பணி புரியும் பணியாளர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

எனவே தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் வழங்கும் பொருட்கள் அனைத்தையும் தரமாக, சரியான அளவோடு, முறையாக, உரிய நேரத்தில் வழங்கவும், பொருட்கள் கள்ளச்சந்தைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், குடும்ப அட்டைதாரர்களின் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே‌.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply