தமிழக அரசு, குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

காவிரி பாசன மாவட்டப்பகுதிகள் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டப்பகுதிகளில் ஜூன் ஜூலையில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வார்கள். இந்த குறுவைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு மேட்டுர் அணைக்கு தண்ணீரின் வருகையும், இருப்பும் குறைவாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் குறுவை சாகுபடி செய்ய காத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேட்டூர் அணையின் நீர் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு கிடைக்காத பட்சத்தில் நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்யப்பட வேண்டும். இச்சூழலில் குறுவைக்கு நிலத்தடி நீர் கிடைத்து, சாகுபடி செய்து, காலத்தே அறுவடை செய்யப்பட வேண்டும். அதாவது வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் அக்டோபர் மாதத்திற்கு முன்பாக குறுவை சாகுபடி அறுவடை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் வடகிழக்கு பருவ மழையால் குறுவை சாகுபடி பாதிக்க வாய்ப்புண்டு.

கடந்த காலங்களில் குறுவை சாகுபடியானது தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைந்தார்கள். அது போன்ற ஒரு நிலை விவசாயிகளுக்கு மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது.

குறுவை தொகுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், பாசன குழாய்கள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படும்.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்படுவதால் தமிழக அரசு பயிர் காப்பீட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் விதை நெல்லை இருப்பில் வைக்க வேண்டும். மும்முனை மின்சாரம் தடையில்லாமல்
வழங்கப்பட வேண்டும். மற்றும் பாசன வாய்க்காலை பராமரித்து, கடைமடை வரை நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால், குறுவை சாகுபடி செய்யப்படும்
பரப்பு அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். விவசாயிகள் பலன் அடைவார்கள்.

எனவே தமிழக அரசு, குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உதவிக்கரமாக குறுவை தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே‌.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply