முதல் கட்ட பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து, இன்று காலை வேட்புமனு தாக்கல் தொடங்கியது .

2024 பொதுத் தேர்தலின் முதல் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. 2024 மக்களவைத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெறும்.

தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்தேர்தல்  நடைபெற உள்ளது.

இன்று தொடங்கிய முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27 அன்று நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28 அன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு  மார்ச் 30 கடைசி நாளாகும்.

பீகார் மாநிலத்தில் மட்டும் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு  மார்ச் 28 கடைசி நாளாகும். அம்மாநிலத்தில் வேட்புமனு மீதான பரிசீலனை 2024 மார்ச் 30 அன்று நடைபெறும்.

அங்கு வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 2 கடைசி நாளாகும்.

102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடைபெற உள்ளன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply