லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் 107-வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு .

புதுதில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின்  107-வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 26, 2024) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று மருத்துவ அறிவியல் என்பது வெறும் சிகிச்சையோடு நின்றுவிடுவதில்லை என்றார். அதன் தன்மை மிகவும் விரிவடைந்துள்ளது என்று அவர் கூறினார். நான்காவது தொழிற்புரட்சி காரணமாக இயற்பியல், டிஜிட்டல் மற்றும் உயிரியல் துறைகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய சோதனைகள் மற்றும் மரபணு நுட்பங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்த சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவியாக உள்ளன என்று அவர் தெரிவித்தார். ஆனால் இந்தத் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தும் சூழலும் நிலவுவதாக அவர் கூறினார். மருத்துவர்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தத் தார்மீகப் பொறுப்பை மருத்துவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். தொழில்முறைத் திறன் மற்றும் கருணை ஆகிய மதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் கொண்டிருந்தால் மட்டுமே உண்மையிலேயே வெற்றிகரமான மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒரு நல்ல சுகாதார நிபுணராக இருக்க, ஒரு நல்ல மனிதராக இருப்பதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். பண்பு இல்லாத அறிவும், மனிதநேயம் இல்லாத அறிவியலும் பாவகரமானது  என்று மகாத்மா  காந்தி கூறியதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும் சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நார்வே அரசுடன் இணைந்து தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் ஆகியவற்றை நிறுவியிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த மையம் உதவியாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply