தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்!-நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் இன்று 05.02.2024 நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் பூஜ்ய நேரத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

மிக்ஜம் புயல் பெருமழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர் இழப்பு மற்றும் ஏராளமான பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் வரலாறு காணாத பெரும் கனமழை, வெள்ளம் காரணமாக தண்ணீர் தேங்கியதோடு, பொதுக் கட்டமைப்புகள் சிதைந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.

பேரிடர் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு நிதி உதவி வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு டிசம்பர் 19 தேதி கடிதம் எழுதியிருந்தேன்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சேதமடைந்த பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.37,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரோடு நானும் 13.01.2024 அன்று, மாண்புமிகு உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடரை, தேசிய பேரிடராக அறிவித்து, போதிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

மாண்புமிகு உள்துறை அமைச்சர், அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, உரிய நிதி விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.ஆனால், உள்துறை அமைச்சகத்திடம் மத்திய குழு அறிக்கை அளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

ஒன்றிய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.பேரிடர் பாதிப்பின் காரணமாக மக்கள் இன்னும் அவதிப்பட்டு வருவதாலும், புனரமைப்புப் பணிகளூக்காக நிவாரணம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாலும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply