பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து; திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.

S.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ  முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது :

கடந்த அதிமுக ஆட்சியில் 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகியவற்றில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

பின்னர் 10 ஆண்டுகளில் சம்பள உயர்வு படிப்படியாக உயர்த்தி, அதிமுக ஆட்சி காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாயாக சம்பளம் வழங்கப்பட்டது. இதில் மரணம், பணிஓய்வு என நான்கு ஆயிரம் பேர்  பணியில் இல்லை. இதனால் 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிய உள்ள நிலையில் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.

இப்போது தான் முதன்முதலில் 2500 ரூபாய் சம்பள உயர்வு அதுவும் ஜனவரி-2024 மாதம் முதல் வழங்க ஆணை  வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சம்பள உயர்வோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட 10 லட்சம் மருத்துவ காப்பீட்டுக்கான ஆணை வெளியிடப்படவில்லை. மருத்துவ காப்பீடு ஆணையும் உடனே வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

தற்போது பணிபுரியும் 12105 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 12500 தொகுப்பூதியம் ஆண்டு ஒன்றுக்கு 11 மாதங்கள் வழங்க அரசுக்கு 160 கோடி ஆகிறது. சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி காலமுறை சம்பளமாக மாதம் ரூபாய் 30 ஆயிரம் வழங்கினால் ஆண்டுக்கு 430 கோடி ஆகும். இதற்கு ஆண்டுக்கு 270 கோடி நிதி கூடுதலாக செலவு ஆகும். இதனை தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு மனிதாபிமானம் கொண்டு செய்ய வேண்டும்.

சட்டசபையில் தமிழக அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

-கே.பி.சுகுமார், ullatchithagaval@gmail.com

Leave a Reply