சடலத்தை வைத்து சாலை மறியல்!-திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பதட்டம்.

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் சஞ்சீவி நகர் அருகே எட்டு திசையில் இருந்தும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு தொடர்ந்து உயிர் பலிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த இடத்தில் சுரங்க பாதை அமைக்காத காரணத்தினால் இந்த இடத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கல்லணை செல்வதற்காக சர்வீஸ் சாலையில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் அந்த இடத்தை கடந்து செல்லும் உள்ளூர் அப்பாவி பொதுமக்களும் தான். இதனால் அந்த இடத்தில் கல்லணைக்கு செல்லும் வகையில் சுரங்க பாதை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கும் பலமுறை மனு அளித்தும் இன்று வரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி -கல்லணை சாலை சர்க்கார் பாளையம் அருகே உள்ள சிவன் கோயில் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் சஞ்சீவி நகர் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (19/01/2024) காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் உறவினர்களும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் இன்று (19/01/2024) மாலை 4 மணி அளவில் சாலை விபத்தில் இறந்த விக்னேஷ் சடலத்தை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே சாலையில் இறக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாநகர காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்ய முற்பட்டனர்.

இந்த இடத்தில் விக்னேஷ் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். கல்லணை சாலைக்கு செல்லும் வகையில் சுரங்கபாதை அமைக்க வேண்டும் அதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் இங்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும். அதுவரை இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம். அதுவரை விக்னேஷ் சடலனத்தை இந்த இடத்தை விட்டு எடுக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.

இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பாரத பிரதமர் நரேந்திர மோதி ஆகாய மார்க்கமாக திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர இருக்கும் இந்த தருணத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் பிரதமரின் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சடலத்தை இறக்கி வைத்து நடந்த இந்த திடீர் சாலை மறியல் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் அவசர அவசரமாக போலீஸ் குவிக்கப்பட்டது.

அப்பகுதியில் விரைவில் சுரங்க பதை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு வழியாக சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் விக்னேஷின் சடலத்தை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டனர்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம் பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை போல் சஞ்சீவி நகர் அருகிலும் போர்க்கால அடிப்படையில் சுரங்க பாதை அமைக்காவிட்டால் இன்னும் பல உயிர்களை சாலை விபத்தில் இழக்க நேரிடும். இதனால் அப்பகுதி மக்களின் கடும் கோபத்திற்கு இன்னும் ஆளாக நேரிடும்.

தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com

Leave a Reply