உயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு சாகும்வரை உண்ணாநிலை போன்ற ஆபத்தான போராட்டங்களை நடத்துவதற்கு மாற்றாக, ஆங்கிலத்தில் உள்ள சட்ட கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்க்க வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பது தான் சரியானதாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் கூறியிருக்கிறார். அவரது யோசனை வரவேற்கத்தக்கது; அப்பணியை வழக்கறிஞர்களுக்கு மாற்றாக தமிழக அரசே மேற்கொள்வது தான் சிறப்பானதாக இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு ஆணையிடக் கோரி பகத்சிங் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது நீதியரசர் இவ்வாறு கூறியிருக்கிறார். தமிழ் உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பதை தாம் வரவேற்பதாகவும், அதற்காக உயிருக்கு ஆபத்தான போராட்டங்கள் தேவையில்லை என்றும் கூறியுள்ள நீதியரசர், அதற்கு பதிலாக தமிழை நன்றாக அறிந்த தம்மைப் போன்ற நீதியரசர்களின் முன் தமிழில் வாதிடலாம்; உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை எளிய தமிழில் மொழிபெயர்க்கலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறார். அவரது யோசனை செயல்படுத்தப்பட வேண்டியதாகும்.

உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வின் வலியுறுத்தலை ஏற்று அதற்கான தீர்மானம் 2006&ஆம் ஆண்டு திசம்பர் 6&ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் கலைஞர், அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்களிடம் கலந்தாய்வு நடத்திய போது, தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்றால், அதற்காக 12 நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள சட்ட நூல்கள், இதழ்கள் அடங்கிய கிளை நூலகம் உருவாக்கிட வேண்டும்.
  2. தமிழ் மென்பொருள் உயர் நீதிமன்றத்தில் அமைத்து அனைத்து கணிப்பொறியிலும் பொருத்துவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.
  3. கணிப்பொறியை இயக்கத் தெரிந்த தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் நியமித்திட வேண்டும்.
  4. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்திட, மொழி பெயர்ப்புக் குழு ஏற்படுத்திட வேண்டும்.
  5. தமிழில் மூல சட்ட நூல்கள், சட்ட விளக்க நூல்கள் அனைத்தும் கொண்டு வர சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.
  6. தமிழில் வெளிவருகின்ற சட்ட நூல்களுக்கு சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.
  7. தமிழில் வெளிவரும் சட்ட இதழ்களுக்கும் சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.
  8. மாநில ஆட்சி மொழி ஆணையத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும்.
  9. உயர்நீதிமன்றத்தில் தமிழை நடைமுறைப் படுத்துவதற்காக மூத்த நீதிபதி தலைமையில் ஒரு குழு ஏற்படுத்திட வேண்டும்.
  10. சட்ட கலைச்சொற்கள் உருவாக்க தனிக்குழு நியமித்திட வேண்டும்.
  11. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்ற சட்டக்கதிர், தீர்ப்புத் திரட்டு இந்த இரண்டு இதழ்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்கள், ஊராட்சிமன்ற படிப்பகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்களின் நூலகங்கள் அனைத்திலும் இடம்பெற சிறப்பு அனுமதியை வழங்கிட வேண்டும்.
  12. அரசு விளம்பரங்களை சட்டக்கதிர் இதழில் வெளியிட சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும். சட்டக் கதிருக்கென சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும் ஆகியவை தான் அந்த பரிந்துரைகளாகும்.
    உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான 12 யோசனைகளையும் தமது அரசு செயல்படுத்தும் என்று அப்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த திட்டங்களை செயல்படுத்தினால் போதுமானது என்று தவறாக புரிந்து கொண்ட தமிழக அரசு, தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால் இந்த பரிந்துரைகளை கடந்த 17 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.

ஒரு திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு, அதன் பிறகு அந்தத் திட்டத்தை செயல்படுத்தும்படி வலியுறுத்துவது சிறப்பானது. அதைத் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும் கூறியிருக்கிறார். இந்தப் பணிகளை வழக்கறிஞர்கள் மட்டுமே செய்வது சாத்தியமல்ல என்பதாலும், இப்பணிகளை செய்ய தமிழக அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதாலும் அவற்றை தமிழக அரசே உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதன்பின்னர் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply