இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் எழுதிய “ இந்துத்துவப் பாசிசம் வேர்களும் -விழுதுகளும்” என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது.

புத்தக அரங்கு எண் 101, 102 இல் ஈரோடு காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, செந்திலதிபன் அவர்களின் புத்தகங்களை விற்கக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். மேலும் புத்தகத்தின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அதேபோல, திராவிடர் கழகத்தின் புத்தக அரங்கில் விற்பனையாகி கொண்டிருக்கும் நூல்கள், மே 17 இயக்கத்தின் நிமிர் பதிப்பகத்தின் நூல்கள் இந்துத்துவ கருத்துகளுக்கு எதிரானவைகளாக இருப்பதால் அவற்றையும் காட்சிப்படுத்தக் கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்துத்துவ சனாதன சக்திகள், வடநாடு போன்ற ஒரு நிலையை உருவாக்க முயன்று வருவதை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இத்தகைய மதவெறி சனாதன கும்பல் எல்லா தளங்களிலும் ஊடுருவ தொடங்கி இருப்பதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாடு எப்போதும் திராவிட மண் என்பதை உணரச் செய்ய வேண்டும்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply